tamilnadu

img

ரேசன்கடைகள் மூலம் ஜூன் மாதமும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்

சென்னை,மே 5- ரேசன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் விலையில்லா பொருட்கள்  அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று தெரிவித்தார்.

 கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அரசு அமைத்துள்ள பணிக்குழுவுடன் ஆய்வு நடத்திய பின்னர் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

 மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நோய் பரவலை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.   மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படை யில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி  அதிகாரிகளுடன் ஆலோசித்தேன். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன்.  கொரோனா தடுப்பு பணிக்காக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 அதிகாரிகளுக்கும் உதவ 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.  கட்டுப்பாட்டு அறைக்கு சென்னை மாநகர மக்கள் தொடர்பு கொள்ளலாம். சென்னையில் 4 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன.

தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்.  எப்போது ரயில் இயக்கப்படும் என்ற தகவல் விரைவில் தெரிவிக்கப்படும்.  சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.  அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.  பொதுமக்களுக்கு ஜூன் மாதமும் ரேசன் கடைகள் மூலம் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

;